கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள்
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொலை வழக்கில் தந்தை, மகன்கள் என நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பரமக்குடி அருகே சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி 55. முன்னாள் ஊராட்சி தலைவர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு முனியசாமி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நயினார்கோவில் போலீசாரால் வேலு 58, மகன் செந்தமிழ் செல்வன் 30, அருமைதுரை 60, மகன் ரமேஷ் 35, பாலுச்சாமி 68, முனியசாமி 68, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பரமக்குடி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் 2020 முதல் விசாரணை நடந்து வருகிறது. செந்தமிழ் செல்வன், அருமை துரை, வேலு, ரமேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பளித்தார். இத்தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். பாலுச்சாமி, முனியசாமி விடுதலை செய்யப்பட்டனர். மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜான் ராஜதுரை ஆஜரானார். நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.