முதுகுளத்துார் பகுதியில் உரமிடும் பணி தீவிரம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் களையெடுத்தல், உரமிடுதல் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கீழத்துாவல், காக்கூர், சாம்பக்குளம், ஏனாதி, நல்லுார், கீரனுார், சித்திரக்குடி கீழக்காஞ்சிரங்குளம், தேரிருவேலி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்கின்றனர். இந்த ஆண்டு பருவமழையை நம்பி விவசாயிகள் நெல் விதைத்தனர். கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது. தற்போது விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் நன்கு முளைக்கதுவங்கியுள்ளன. இதனால்விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். களை எடுப்பதற்கு கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.