பலத்த காற்றால் ஆழ்கடலுக்குள் சென்ற மீன்கள்: மீனவர் ஏமாற்றம்
தொண்டி : தொண்டி பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீன்கள் ஆழ்கடலுக்குள் சென்றதால் 10 நாட்களாக போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து எம்.ஆர்.பட்டினம் மீனவர்கள் கூறியதாவது: தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. அலைகள் அதிகமானதால் மீன்கள் ஆழ்கடலுக்குள் சென்று விட்டன. இதனால் போதிய மீன்கள் கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வலைகளை வீசி இழுப்பதும் கடினமாக உள்ளது. மீன்கள் வலையில் சிக்குவது குறைவாக உள்ளது. டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை. மேலும் சொறி மீன்கள் அதிகமாக வலையில் சிக்குகிறது. இந்த வகையான மீன்கள் நச்சுத் தன்மை கொண்டவை. வலையில் சிக்கும் அந்த வகையான மீன்களை கவனமாக கையாள வேண்டியுள்ளது. மீன்களை தொடாமல் விடுவிக்க வேண்டும். இந்த வகை மீன்களால் வலை சேதமடைவதால் மீனவர்கள் பாதிக்கபட்டுள்ளனர் என்றனர். மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து குறைவால் தொண்டி, திருவாடானை பகுதியில் மீன்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் அசைவம் சாப்பிடுபவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.