பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்: ஆர்.டி.இ., தொகையை அரசு விடுவிக்கவில்லை
பரமக்குடி: பரமக்குடி பள்ளிகளில் அரசின் ஆர்.டி.இ., தொகை வராததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதன்படி 2021---2022 துவங்கி 3 ஆண்டுகளாக தமிழக பள்ளிகளுக்கு அரசின் தொகை வராமல் இருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஆர்.டி.இ., திட்டத்தில் சேர்ந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்துகின்றனர். இதனால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மத்திய அரசு கடந்த மாதம் 586 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு விடுவித்துள்ளது. ஆனால் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு அந்தத் தொகையை தமிழக அரசு விடுவிக்காமல் இருக்கிறது. ஆகவே உடனடியாக அந்தந்த பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., தொகையை விடுவித்து ஏழை மாணவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.