தீவுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் வனத்துறையினர்
கீழக்கரை: கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர கிராமங்களில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பை தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்துள்ளது. கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாளைத்தீவு, அப்பாத்தீவு, முள்ளித்தீவு, தலையாரி தீவு, வாலிமுனை தீவு, யானை பார் தீவு உள்ளிட்ட தீவுகள் உள்ளன. இந்நிலையில் கடற்கரை ஓரங்களில் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பை காற்றின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு தீவுகளில் குவிக்கின்றன. அவற்றை வாரத்திற்கு மூன்று முறை ரோந்து செல்லும் மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தினர் வேட்டை தடுப்பு காவலர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, தண்ணீர் கேன், வாட்டர் பாட்டில் மற்றும் பல்வேறு வகையான மக்காத குப்பையை சேகரித்து அவற்றை மீண்டும் கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனச்சரகத்தினர் கூறியதாவது: கடற்கரையோர கிராமங்களில் இங்கு குப்பை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறோம். இதே போன்ற பிளாஸ்டிக் குப்பையால் அரிய வகை உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு பேராபத்தாக முடியும். எனவே இது குறித்த போதிய விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீவுகளுக்குள் பூவரசு, புங்கன், பனங்கொட்டை உள்ளிட்டவைகள் நடவு செய்யப்பட்டு சமீபத்தில் பெய்த கோடை மழை பயனுள்ளதாக அமைந்தது. தீவுகளில் வளர்க்கக்கூடிய மரங்களால் மண்ணரிப்பு மற்றும் காற்று தடுப்பானாக விளங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது என்றனர்.