விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பல இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தற்போது முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தங்கள் பணியாற்றிய காலங்களில் செய்த சாதனைகளை சுட்டிக்காட்டி பல இடங்களில் பேனராக வைத்துள்ளனர்.கடந்த 2020 ஜன., முதல் 2025 ஜன., 5 வரை பணியாற்றிய ஊராட்சித் தலைவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து பிளக்ஸ் வைத்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலான ஊராட்சிகளில் சுய விளம்பரத்திற்காக தங்களை புகழ்ந்தும் பிளக்ஸ் பேனர் வைக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் சொன்ன சாதனைகளில் பெரும்பாலானவை பொதுமக்களிடம் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக செய்யப்பட்ட திட்டங்களாகவே உள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் 5 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட தடுப்பணைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.படித்துறை, அங்கன்வாடி மைய கட்டடம், தார் ரோடு உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தற்போது ஊராட்சி பதவிகள் நிறைவடைந்த நிலையில் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே அவற்றை உரிய முறையில் கண்காணிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.