பரமக்குடி நெசவாளருக்கு இலவச மின்சாரம், முத்ரா கடன் மேளா; செப். 30ல் நடக்கிறது
பரமக்குடி : பரமக்குடி கைத்தறி துறை சார்பில் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் மற்றும் முத்ரா கடன் விண்ணப்பம் மேளா நடக்கிறது.பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் பல ஆயிரம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாகவும், தனியாரிடமும் நெசவு செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் இலவச மின்சாரம் பெறவும், வங்கிகளில் முத்ரா கடன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி முத்ரா கடன் திட்டத்தில் நெசவாளருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடன் தொகையில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நெசவாளர் இலவச மின்சார திட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. இவற்றை நெசவாளர்களுக்கு பெற்றுத் தரும் நோக்கில் விண்ணப்பம் பெறும் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார். எமனேஸ்வரம் முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் செப்.30 காலை 10:00 மணிக்கு மேளா நடக்கிறது. அப்போது நெசவாளர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, நெசவாளர் அட்டை, உறுப்பினர் அடையாள அட்டை, மின்சார கட்டண ரசீது, உத்யம் சான்றிதழ், வீட்டு ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.