நீர் நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கிராம சபை தீர்மானம்
திருவாடானை: நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நெய்வயல் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ஆசைராமநாதன் தலைமையில் நடந்தது.ஊராட்சி செயலர் சங்கையா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். திட்ட பணிகள், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம்உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.நெய்வயல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கண்மாய், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆகவே அவற்றை அகற்ற வேண்டும்.தேவகோட்டையில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்படும் டவுன் பஸ் அதங்குடி, நெய்வயல், நாச்சியேந்தல் வழியாக திருவாடானை சென்ற நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.