கழிவுநீர் செல்லாத இடங்களில் வாறுகால் அமைக்கும் பணி வழிகாட்டுதல் தேவை
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் கடந்த 10 நாட்களாக வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து அண்ணாநகர் செல்லக்கூடிய சாலையின் இடது புறத்தில் தற்போது வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது. கட்டுமான பொருள்களை அதிகளவு சாலையோரத்தில் குவித்து வைத்திருப்பதால் ராமநாதபுரம், ஏர்வாடி தர்கா, சாயல்குடி, திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, கொம்பூதி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் சிரமத்தை சந்திக்கின்றன. பொதுமக்கள் கூறியதாவது: வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கிழக்கு நோக்கி அண்ணா நகர் செல்லும் சாலையில் வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் ஏதும் கிடையாது. இருப்பினும் அப்பகுதியில் வாறுகால் அமைப்பதால் எந்த பயனும் இல்லை. இத்திட்டத்தால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக கீழக்கரை நகருக்குள் வரக்கூடிய அனைத்து அரசு பஸ் டிரைவர்களும் போக்குவரத்து நெரிசலில் பஸ்சை இயக்குகின்றனர். காலை மாலை நேரங்களில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது அமைக்கப்படும் வாறுகால்வாயால் எந்த பயனும் இல்லை. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க உரிய வழிகாட்டுதல் அவசிய தேவையாக உள்ளது என்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் இனி வரக்கூடிய காலங்களில் வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைத்து வருகிறோம். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கழிவுநீர் வெளியேற்றுவதற்கு வழி கிடைக்கும் என்றனர்.