ராமேஸ்வரத்தில் அதிகம் கிடைத்த முண்டக்கண்ணி மீன்களால் மகிழ்ச்சி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம் பனில் இருந்து அக்., 30ல், 90 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் திரும்பினர். பெரும்பாலான படகில் மருத்துவ குணம் வாய்ந்த முண்டக்கண்ணி மீன்கள் அதிகளவில் சிக்கின. பெரிய கண்கள் இருப்பதால் இதை முண்டக்கண்ணி மீன் என, மீனவர்கள் அழைக்கின்றனர். ருசி குறைவாக இருக்கும் இந்த மீன்களை தமிழகத்தில் அதிகம் விரும்புவதில்லை. ஆனால், கேரளாவில் விரும்பி ருசிக்கின்றனர். கிலோ 60 ரூபாய் வரை விற்ற முண்டக்கண்ணி மீன், நேற்று 100 ரூபாய் வரை விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை சீசனில் மட்டுமே இந்த மீன் சிக்கும். பாறைகளில் படியும் பாசி, சிறியவகை பூச்சி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தான் இவற்றின் உணவு. பகலில் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்து, இரவில் உணவுக்காக வெளியே வரும். இந்த மீனின் உணவை விட எண்ணெய் உற்பத்திக்காக கேரளாவில் பிரபலம். இதில், ஒமேகா -3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், கெட்ட கொழுப்பை கட்டுபடுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அதிக கால்சியம், பாஸ்பரஸ் காரணமாக எலும்பு உறுதியடையும். 'வைட்டமின் ட ி ' இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.