மல்லிகை நாற்று விலை உயர்வால் மகிழ்ச்சி
ராமநாதபுரம்:-மல்லிகை நாற்று விலை உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கன மழையால் வட மாவட்டங்களில் உள்ள மல்லிகை தோட்டங்கள் அழுகி செடிகள் அனைத்தும் வீணாகி விட்டன. இதனால் மல்லிகை நாற்றுகளை வாங்க ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விவசாயிகள் வருகின்றனர்.பதியம் போட்டு நாற்றுகளை உருவாக்குவதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும். மல்லிகை நாற்றுகளுக்கு தேவை அதிகமாக இருப்பதால் விலை அதிகரித்து ரூ.2.50ல் இருந்து ஒரு நாற்று ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுவதால் நாற்று பண்ணை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மல்லிகை நாற்று உற்பத்தியாளர் நொச்சியூரணி மெய்கண்டன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம், நொச்சியூரணி பகுதியில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். குறைந்த பட்சம் ஒரு நாற்று ரூ.2.50க்கு விற்பனையாகியது. தற்போது பற்றாக்குறையால் ரூ.5 வரை விலை போகிறது என்றார்.