அரியநாதபுரத்தில் தேங்கிய மழை நீரால் சுகாதாரக்கேடு தனி அலுவலர் நடவடிக்கை தேவை
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுார் ஊராட்சி அரியநாதபுரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்துள்ளது. மழைக் காலங்களிலும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்குவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பா.ஜ., இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஆப்பனுார் வேல்முருகன் கூறியதாவது: ரோட்டின் நடுவே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோரின் கைகளை முள் மரங்கள் பதம் பார்க்கிறது. பொது சுகாதார வளாகம் இன்னும் கட்டப்படவில்லை. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் மற்றும் தனி அலுவலர் அரியநாதபுரத்தை ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.