உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் பலத்த மழை; முதுகுளத்துாரில் நிலங்களில் தேங்கிய தண்ணீர் தீர்த்தாண்டதானத்தில் 80 மி.மீ., ; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராமநாதபுரத்தில் பலத்த மழை; முதுகுளத்துாரில் நிலங்களில் தேங்கிய தண்ணீர் தீர்த்தாண்டதானத்தில் 80 மி.மீ., ; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராமநாதபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.,16ல் துவங்கிய நிலையில் நேற்று இரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. நேற்று தீர்த்தாண்டதானத்தில் அதிகபட்சமாக 80.20 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை 8:00 மணி வரையிலான மழை விவரம் மி.மீ.,ல்: தீர்த்தாண்டதானம் 80.20 மி.மீ., கடலாடி 41, வாலிநோக்கம் 40.80, மண்டபம் 35.60, பாம்பன் 31.30 , ராமேஸ்வரம் 29.50, தொண்டி 28, தங்கச்சிமடம் 26.20, ராமநாதபுரம் 20, முதுகுளத்துார் 16.80, திருப்புல்லாணி 12.20, பரமக்குடி 11.20, வட்டாணம் 9.20, திருவாடானை 8.60, கமுதி 7.10, ஆர்.எஸ்.மங்கலம் 6, என மாவட்டம் முழுவதும் மொத்தம் 403.70 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 25.23 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சேதுபதி நகர் குடியிருப்போர் நல சங்க பொருளாளர் அன்புசெல்வன் கூறியதாவது: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சேதுபதி நகர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் மக்கள் சாலையில் நடக்க கூட முடியவில்லை. சமீபத்தில் மழைக்கால அவசர தேவைக்கு 1077 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் சென்று கேட்டால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் மழைநீர் அகற்றப்படாமல் ஒரு வாரமாக குளம் போல் தேங்கியுள்ளது.நாளுக்கு நாள் மழை அதிகரிப்பதால் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்புக்குள் வருகிறது. இதனால் அங்கு வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் வருகின்றன. அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குடிநீர் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றார். முதுகுளத்துார்:- முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்ததால் வீடுகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் நெல் விவசாயப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதுகுளத்துார், காக்கூர், இளஞ்செம்பூர், பூக்குளம், ஏனாதி, கீழத்துாவல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது.வீடுகளை சுற்றிலும் கழிவு நீருடன் மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேரிருவேலியில் விவசாய நிலத்தில் சூழ்ந்துள்ள தண்ணீர் முதுகுளத்துார்--ராமநாதபுரம் ரோட்டின் மேல் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரம் கட்டி வருகின்றனர். கண்மாய், ஊருணிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வீடு சேதம் சடையனேரி கிராமத்தை சேர்ந்த சுந்தரி குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் பெய்த மழையில் இவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் வெளிபுறமாக விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது சேதமடைந்த வீட்டில் வசித்து வரும் அவலநிலை உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை