பள்ளி பழைய கட்டடம் அகற்றாவிடில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, : தொண்டி கலந்தர் ஆசிக் அகமது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தொண்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. பழைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை அகற்றிவிட்டு புதிதாக கட்டுமானம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அகற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பழைய கட்டடத்தை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் தினசரி ரூ.1000 வீதம் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.