தி.மு.க., எம்.பி., ராஜா பதவியை பறிக்க ஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ஹிந்து பாரத முன்னணி சார்பில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை தவறாக பேசிய தி.மு.க., எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா மற்றும் நிர்வாகிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதில், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஹிந்துக்கள் எழுச்சி மற்றும் பா.ஜ., கட்சி வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.,வினர் அவதுாறு பரப்புகின்றனர்.சென்னையில் நடந்த தி.மு.க., பாகமுகவர்கள் கூட்டத்தில் நீலகிரி எம்.பி.,யும், கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இழிவுப்படுத்தும் விதமாகவும், முட்டாள் என இருமுறை பேசியுள்ளார்.அவரது பேச்சு ஒவ்வொரு இந்திய குடிமக்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. எனவே ஆ.ராஜா மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து அவரது எம்.பி., பதவியை தகுதிநீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆ.ராஜா உருவ படத்தை கிழிக்க முயன்றபோது அவர்களை தடுத்து, படங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.