கலெக்டர் அலுவலகம் உள்ள பட்டணம்காத்தானில்.. பாதாள சாக்கடை அவசியம்; காலியிடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் அருகேயுள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியில் பெயரளவில்சாக்கடை மேலாண்மை காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட தாழ்வானஇடங்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேட்டால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தில் உடனடியாக பாதாள சாக்கடை வசதிசெய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சி அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், மாவட்ட கல்வி அலுவலகம், மற்றும் அம்மாபூங்கா, மாவட்ட மைய நுாலகம், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நலத்துறை என பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஏராளமான அலுவலகங்கள் செயல்படுகின்றன.இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. சாக்கடை பராமரிப்பு பெயரளவில் உள்ளதால் அம்மா பூங்கா ரோட்டில் மாணவர் விடுதி, புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகேயுள்ள காலி இடங்களில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாகியுள்ளது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள், மாணவர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது.கலெக்டர் அலுவலகம் உள்ள ராமேஸ்வரம் ரோட்டில் ஆயுதப்படை மைதானம் அருகே குளம் போல நிரந்தரமாக கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட தலைநகருக்கு அடுத்தப்படியாக உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்து பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.