உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.பல லட்சம் செலவழித்தும் ராமநாதபுரத்தில்... மக்களின் தீராத துயரம் ; பாதாள சாக்கடை நீரால் ஊருணிகளில் துர்நாற்றம்

ரூ.பல லட்சம் செலவழித்தும் ராமநாதபுரத்தில்... மக்களின் தீராத துயரம் ; பாதாள சாக்கடை நீரால் ஊருணிகளில் துர்நாற்றம்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் செலவு செய்யப்பட்டாலும் முறையான திட்டமிடுதல் இன்றி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றத்தால் தீராத துயரத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2013 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் 64 கி.மீ., நீளமுள்ள கழிவுநீர் குழாய்கள், 2160 ஆய்வுக்குழிகள், 10,500 கி.மீ., நீளமுள்ள பம்பிங் குழாய்கள், 5 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள், 2 லிப்ட் ஸ்டேஷன். 7.10 எம்.எல்.டி., கொள்ளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் 12,250 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊருணி, சிங்காரத்தோப்பு, குண்டூருணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன. கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கழுகூரணி அருகே சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் சேதமடைந்து பல இடங்களில் அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் பல இடங்களில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. இவ்விடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.10 லட்சம் வரை நகராட்சி செலவு செய்கிறது.இருந்தாலும் மழைநீர் கலப்பு, துணி, பாலிதீன் குப்பை அடைப்பு, பழைய குழாய்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை நீர் ரோடு, குடியிருப்பு இடங்களில் ஆறாக ஓடுகிறது. இவற்றை அப்புறப்படுத்தாமல் செம்மங்குண்டு, பாம்பூருணி, கிடாவெட்டி ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளின் வரத்து கால்வாயில் விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர். பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே குளம் போல கழிவுநீர் தேங்கி விடுகிறது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ