ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் வர்த்தகர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் கூறியிருப்பதாவது: அரண்மனை வீதியில் சாலையின் வடபுறம் அப்பட்டமான முறையில் ஆக்கிரமிப்பு செய்து அங்கு பழக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருவதுடன் சுற்றிலும் பக்காவாக கம்பி வேலி அமைத்துள்ளனர். அங்கு கடை நடத்தி வரும் வணிகர்களின் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரமுடியாமல் வணிகர்களும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழக்கழிவுகள், குப்பை சரிவர அள்ளப்படாமல் சிதறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு தகரசெட் அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் குறை தீர்க்கும் நாளில் வணிகர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். வண்டிக்கார தெருவில் தொடங்கி வடக்கு நோக்கி சவேரியார் கோவில் தெரு வரையும் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி கமிஷனர் ஆய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.