உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டப்பணி ஓராண்டிற்கும் மேலாக இழுத்தடிப்பு 50 சதவீதம் மட்டுமே நிறைவு

சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டப்பணி ஓராண்டிற்கும் மேலாக இழுத்தடிப்பு 50 சதவீதம் மட்டுமே நிறைவு

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் 2023 ல் துவக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டப் பணிகள் குறிப்பிட்ட காலத்தை கடந்தும் நிறைவடையாமல் 50 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சாயல்குடியில் 200 தெருக்கள் உள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.40 கோடியே 8 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023 ஏப்., முதல் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 1 முதல் 15 வார்டுகளில் உள்ள தெருக்களின் பக்கவாட்டிலும் மற்றும் நடுப்பகுதிகளிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அவற்றில் பைப் லைன்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பெருவாரியான பேவர் பிளாக், தார் சாலை, கான்கிரீட் சாலை உள்ளிட்டவைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு அவற்றை மீண்டும் சரி செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரு கின்றனர். சாயல்குடி பேரூராட்சியின் 15வது வார்டு கவுன்சிலர் மாணிக்கவேல் கூறியதாவது: மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சேதப்படுத்தி பைப்லைன் பதிக்கின்றனர். மூன்றரை அடி குழியில் குழாய் பதிக்க வேண்டும். ஆனால் ஒரு சில இடங்களில் ஒன்றரை அடியில் பெயரளவிற்கு பதித்துள்ளனர். தோண்டப்பட்ட சாலையின் மீது கான்கிரீட் கலவையைக் கொண்டு பூசி பலப்படுத்தாமல் உள்ளனர். அக்.,30, 2024க்குள் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்று நிர்ணயித்தும் தற்போது வரை 50 சதவீதம் பணிகள் கூட முழுமை பெறாமல் உள்ளது. மாதக்கணக்கில் பணிகளை இழுத்தடிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செய்யப்படும் இத்திட்ட பணிகளை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதனால் தரமற்ற பணிகளை சுட்டிக்காட்டி அதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும். இது குறித்து தமிழக முதல்வருக்கும், அரசு முதன்மைச் செயலாளருக்கும் இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ