பாக் ஜலசந்திக்குள் காரைக்கால் நாகை மீனவர்கள் மீன் பிடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்
ராமநாதபுரம்,:காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதிக்குள் மீன் பிடிக்க வருவதை தடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் பாரம்பரிய இந்திய மீனவர் நலசங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தமிழக அரசின் விதிகளுக்குட்பட்டு 150 எச்.பி., குதிரை திறன் இன்ஜின் மூலம் விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மீன் பிடிக்கின்றனர். நாட்டுப்படகு வைத்திருப்போர் மீதமுள்ள நான்கு நாட்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். தற்போது காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கோரமண்டல பகுதியில் மீன் பிடிக்கும் 350 எச்.பி., குதிரை திறன் இன்ஜின் பொருத்தப்பட்ட பெரிய விசைப்படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கின்றனர். குறுகிய பாக்ஜலசந்தி கடல் பரப்பில் உள்ள மீன்வளத்தை அழிக்கின்றனர். இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடலில் மற்ற மீனவர்கள் விட்டுச்சென்ற வலைகளை காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள் சேதப்படுத்தி செல்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் பதிலுக்கு ராமேஸ்வரத்தை சேர்ந்த பாரம்பரிய மீனவர்களை தாக்குகின்றனர். பாக்ஜலசந்தி, கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிக்கு வந்து மீன்பிடிக்கும் காரைக்கால், நாகப்பட்டினம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.