உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகம்: ராமநாதபுரம் கோயில்களில் கோலாகலம்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகம்: ராமநாதபுரம் கோயில்களில் கோலாகலம்

ராமநாதபுரம்: அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள், ராம நாம கீர்த்தனை, பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ராமநாதபுரம் மாவட்ட ஆரிய வைசிய மகாஜன சங்கம் சார்பில் ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஸ்ரீராமர், சீதாதேவி ராஜ அலங்காரத்திலும், லட்சுமணன், ஆஞ்சநேயர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. 1008 முறை கோலத்தில் ராம், ராம் என எழுதியும், குழந்தைகள் ராமர், சீதா அலங்காரத்தில் கீர்த்தனைகள் நடந்தது.அயோத்தி அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராமநாமம் ஜெபித்தனர். அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் காலை 300 பேருக்கு இட்லி வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.*சாயல்குடியில் ஆஞ்சநேயர், பாமா ருக்மணி சமேத கண்ணபிரான், கைலாசநாதர் உள்ளிட்ட கோயில்களில் அயோத்தியில் நடந்த பால ராமர் பிரணவ பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். சாயல்குடி யாதவ மகா சபை செயலாளர் ஆறுமுகம், வர்த்தக சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.ராமபிரான் துதி பாடல்கள் பாடப்பட்டது. முன்னதாக மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.* பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் மூலவர் அமர்ந்த திருக்கோலத்தில் வில், அம்பு ஏந்தி ராமாவதாரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து ராம நாம பாராயணம், ஜபம் நடந்தது.பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமர் சீதை லட்சுமணர் சந்நதியில் சிறப்பு தீபாராதனைகள் நடத்தது. தொடர்ந்து புனிதபுளி ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் நடத்தினர்.*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ராம நாம பாராயணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மேள தாளம் முழங்க முக்கிய வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு ராம நாம பாராயணம் நடந்தது. மாலை 5:00 மணி முதல் பொதுமக்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.*ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ராமபிரான் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலின் முன்பு கட்சியினர் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷ முழக்கத்துடன் அயோத்தி கும்பாபிஷேக விழாவை கொண்டாடினர்.ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலில் ராம பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை