நீர் நிலைகள் விழிப்புணர்வு இல்லை; ஆண்டுதோறும் உயிர்பலி அதிகரிப்பு
திருவாடானை ; திருவாடானை தாலுகாவில் நீர் நிலைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுதோறும் குளத்தில் குளிக்கும் போது மூச்சு திணறி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும்பாலான கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் கண்மாய், குளங்கள் முழுவதும் நிரம்பி நீர் கலுங்கு வழியாக வெளியேறுகிறது.இந்நிலையில் ஆழம் தெரியாமல் கண்மாய், ஊருணிகளில் இறங்கி குளிக்கும் போது மூச்சு திணறி உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த ஆண்டு நெய்வயல் அணிக்கி, அத்தாணி கண்மாய்களில் இருவர் ஒரே நாளில் இறந்தனர். அழகமடை கண்மாயில் தாயும், மகளும் இறந்தனர்.நேற்று முன்தினம் தொண்டி அருகே பாசிபட்டினத்தில் இரு மாணவிகள் பலியாகினர். நீர் நிலைகளுக்கு சென்று மீன் பிடிப்பது, ஆழம் தெரியாமல் குளிப்பது போன்ற சம்பவங்களால் ஆண்டுதோறும் பலி அதிகமாகிறது. ஆகவே மழைக்கு முன் ஆபத்தான கண்மாய், ஊருணிகளுக்கு முன் எச்சரிக்கை போர்டு வைப்பது போன்ற விழிப்புணர்வுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.