உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிரந்தர வேளாண் உதவி இயக்குநர் இல்லை அரசின் திட்டங்கள் செயல்பாட்டில் பாதிப்பு

நிரந்தர வேளாண் உதவி இயக்குநர் இல்லை அரசின் திட்டங்கள் செயல்பாட்டில் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை வேளாண் அலுவலகத்திற்கு நிரந்தர வேளாண் உதவி இயக்குநர் நியமிக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. நெல் சாகுபடி முதலிடத்தில் உள்ளது. வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் பாரதிநகரில் அமைந்திருந்தது. கட்டடம் சேதமடைந்ததால் தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார விரிவாக்க மைய வராண்டாவில் இயங்கி வருகிறது.வேளாண் உதவி இயக்குனர் தலைமை அலுவலராகவும், இவரின் கீழ் வட்டார அளவில் வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உள்ளனர். அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேளாண் உதவி இயக்குனரின் பொறுப்பாகும்.பயிர் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை, பாசனம் செய்வது குறித்து வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் வேளாண் உதவி இயக்குனரால் வழங்கப்படும்.வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், விவசாயிகளுக்கு மானியங்கள், உதவித்தொகை போன்ற திட்டங்களை வழங்கும் பணிகள் இவரால் மேற்கொள்ளப்படும்.விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை தரத்துடன் விற்பனை செய்வதை உறுதி செய்தல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். கிராமங்களில் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் வளர்ச்சி குழு கூட்டங்களை நடத்தி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது முக்கிய பணியாக உள்ளது.இவ்வளவு முக்கிய பொறுப்புள்ள உதவி இயக்குனர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு இங்கு பணியாற்றிய உதவி இயக்குனர் ஓய்வு பெற்றார். தற்போது தற்காலிக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் விவசாய பணிகள் துவங்க போகும் நிலையில் நிரந்தர வேளாண் உதவி இயக்குநர் நியமிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ