உழவரைத்தேடி திட்டம் துவக்க விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கழுகூரணி, நாரணமங்கலம் கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண் -உழவர் நலத்துறை திட்டம் துவக்க விழா நடந்தது. ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் அம்பேத்குமார் தலைமை வகித்தார். நாரணமங்களத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநர் புனித சுகன்யா தலைமை வகித்தார். இம்முகாமில் வேளாண் -உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளுக்கான அனைத்து புதிய தொழில் நுட்பங்கள், திட்டங்கள், இயந்திரங்கள், கருவிகள், வேளாண் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது.வேளாண் இடுபொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள், பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்தல், உயிர்ம வேளாண்மையின் அவசியம், உழவன் செயலி சேவைகள் தொடர்பான விவரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. வேளாண்மை பொறியியல் துறை, வணிகத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம்
கவ்வூரில் உழவரைத் தேடி வேளாண் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு சுப்ரியா தலைமை வகித்து வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் வேளாண்மை உழவர் விவசாய அடையாள அட்டையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்விசை கைத்தெளிப்பான் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சனவேலி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாரதி, வேளாண்மை அலுவலர் ராதா, வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மையை அறிவியல் நிலையம் ஆகிய துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.