அரசு பள்ளியில் பூட்டி கிடக்கும் கழிப்பறை: மாணவர்கள் சிரமம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டி முடித்து கழிப்பறை திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தற்போது வரை கழிப்பறை திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. மாணவர்கள் பள்ளி நேரத்தில் கழிப்பறைக்காக மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் அவல நிலை உள்ளது.இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வராத கழிப்பறையால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி கழிப்பறையை திறப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பெற்றோர் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.