கவுதமியிடம் நிலமோசடி வழக்கில் மேலாளர் ஜாமின் மனு தள்ளுபடி
ராமநாதபுரம்:-நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடியே 16 லட்சம் நிலமோசடி செய்த வழக்கில் சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரின் ஜாமின் மனுவை ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் பிரபாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சுவாத்தான் பகுதியில் 150 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் ரூ.3 கோடியே 16 லட்சம் நடிகை கவுதமியிடம் பெற்றுள்ளார். செபி நிறுவனம் விற்பனைக்கு தடை செய்துள்ள பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் 64 ஏக்கர் நிலத்தினை கவுதமிக்கு எழுதிக்கொடுத்து அவரும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர்.கவுதமி புகாரில் நில புரோக்கர் நெல்லியான், பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், அழகப்பனின் மேலாளர் ரமேஷ்சங்கர் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். அழகப்பன் மற்றொரு வழக்கில் வேலுார் சிறையில் உள்ளார்.அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரை சென்னையில் அக்., 3ல் போலீசார் கைது செய்தனர். அவர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.வழக்கின் முக்கியமான பங்கு ரமேஷ் சங்கருடையது என்பதால் ஜாமின் வழங்க கூடாது, என ஆட்சேபம் தெரிவித்து கவுதமி மனு செய்தார். ரமேஷ் சங்கரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.