கன்னிராஜபுரத்தில் சுயம்புலிங்க சுவாமி கோயில் மண்டல பூஜை
சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு பிப்.,2ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு யாகசாலை பூஜைகளும் தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டது.தொடர்ந்து 48 நாட்கள் நிறைவில் மண்டல பூஜையை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமி, பிரம்ம சக்தி அம்மன், வராகி அம்மன், கஜலட்சுமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி முன்பு ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டு குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி, சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடந்தது.கோயில் அறங்காவலர் ஆனந்தலிங்கம் முன்னிலை வகித்து நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுயம்புலிங்க சுவாமி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.