பரமக்குடியில் மினி விளையாட்டு அரங்கம் வீண்: வேதனையில் வீரர்கள்
பரமக்குடி: பரமக்குடியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மினி விளையாட்டு அரங்கம் பராமரிப்பு இன்றி, குப்பை கொட்டும் இடமாகியுள்ளதாக விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி சந்தை திடலில் 2007 ஜன.,30ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரூ.30 லட்சத்தில் மினி விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. 5 ஆண்டுகள் வரை மட்டுமே அரங்கத்தில் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பரமக்குடி பகுதியில் 400 மீ., ஓடு தளத்துடன் பிரம்மாண்ட முறையில் அரங்கம் செயல்பட்டது. இதேபோல் ஹாக்கி, கால் பந்து மைதானங்கள் உள்ளது.மேலும் அனைத்து வகையான தடகளப் போட்டிகளும் நடத்தும் வகையில் அரங்கம் உள்ளதுடன் வீரர்கள் தங்கும் அறை இருந்தது. ஆனால் தற்போது எந்த வகையான செயல்பாடுகளும் இன்றி மழை பெய்தால் குளமாக அரங்கம் மாறிவிடுகிறது.வீரர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் உடைந்து வீணாகி உள்ளது. மேலும் கழிப்பறை பயன்படுத்த முடியாத சூழலில் அரங்கத்தை சுற்றி இருந்த காம்பவுண்ட் சுவர்கள் காணாமல் போய் கதவுகள் திருடப்பட்டுள்ளது. மைதானம் குப்பை கொட்டும் இடமாகியுள்ளது.ஆகவே விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த சூழலில் பரமக்குடியில் 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.