முதுகுளத்துார் பெரிய கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பெரிய கண்மாயில் சீமைக் கருவேல் மரங்களை அகற்றி முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். முதுகுளத்துார் பெரிய கண்மாய் 9 கி.மீ., பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீரால் 40 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் தண்ணீர் பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.73 கோடியில் மடைகள் அமைத்தும் வரத்து கால்வாய்கள், கரைகள் பலப்படுத்தி சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடந்தது. பணிகள் முடிவதற்குள் பருவமழை பெய்யாததால் முழுவதுமாக நடைபெறவில்லை. அதன் பிறகு பெய்த மழைக்கு கண்மாய் கரைகள் துார்ந்து போனது. அதற்கு பிறகு பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீர் பயன்படுத்த முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தாசில்தாரிடம் அனுமதி பெற்று சவடு மண் அனுமதி பெற்று தாழ்வான பகுதியில் உயர்த்தினர். கண்மாயில் ஆங்காங்கே மட்டும் சவடுமண் அள்ளப்பட்டதால் பள்ளங்கள் உருவாகியுள்ளது. பள்ளங்களில் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பாசனம் வசதி பெற்ற விவசாய நிலங்களில் போர்வெல் தண்ணீரை பாய்ச்சி வந்தனர். அதுமட்டுமில்லாமல் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்மாய் தண்ணீரை கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட மடை சேதமடைந்ததும், வரத்து கால்வாய் இருந்த இடம் தெரியாமல் மணல் மேடாகி மூடியுள்ளது. இதனால் பருவமழை காலங்களில் தேங்கும் மழைநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி வருகிறது. எனவே முதுகுளத்துார் பெரிய கண்மாய் சீமைக் கருவேலம் மரங்கள் அகற்றி ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு தண்ணீர் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வசதியாக வரத்து கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.