நீத்தார் நினைவு தினம்: 66 குண்டுகள் முழங்க அஞ்சலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த நீத்தார் நினைவு தினத்தில்உயிரிழந்த 213 வீரர்களுக்கு 66 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், டி.ஐ.ஜி., அபிநவ்குமார், சந்தீஷ் எஸ்.பி., ஆகியோர் பங்கேற்று நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழந்தவர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.சந்திஷ் எஸ்.பி., பேசியதாவது: லடாக் பகுதியில் 1959ல் சீன ராணுவத்தினர்நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அக்.21ல் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2023 செப்.1 முதல் 2024 ஆக.31 வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பணியின் போது தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட உயிரிழந்த 213 வீரர்களின் நினைவாக நீத்தார் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது என்றார். பின் மாவட்டத்தில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கப்பற்படை, கடலோர காவல்படை கமாண்டர்கள், ஆயுதப்படை டி.எஸ்.பி., சிவராமன், ஊர்க்காவல்படையினர் உட்பட அதிகாரிகள் பங்ககேற்றனர். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.