ராமேஸ்வரம் கோயிலில் கிடப்பில் புதிய ஊழியர் தேர்வு: தமிழக அரசு இழுத்தடிப்பு
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய ஊழியர்கள் நியமனத்திற்கு ஏராளமான பட்டதாரிகள், இளைஞர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 177 நாட்கள் ஆகியும் நேரடி தேர்வு நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் குருக்கள், தமிழ்புலவர், பேஸ்கார்கள், காவலர்கள், துாய்மைப் பணியாளர்கள் என 150 பேர் பணிபுரிகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி தமிழ் புலவர், காவலர், துப்புரவு மற்றும் துார்வை ஊழியர்கள் என 76 பணியிடத்திற்கு கடந்த பிப்., 7ல் அறிவிப்பு வெளியிட்டு மார்ச் 12ல் விண்ணப்பிக்க கடைசி நாள் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்காக இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், இளைஞர்கள் 2850 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 177 நாள்கள் ஆகியும் இதுநாள் வரை நேரடி தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறை இழுத்தடித்து வருகிறது. 76 பணியிடங்களை நிரப்ப 177 நாட்கள் ஆகியும் ஏன் தாமதம் ஆகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இதன் மூலம் நியமனத்தில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வேலை கிடைக்கும் ஆவலில் காத்திருக்கும் பட்டதாரிகள், இளைஞர்களின் கனவை நனவாக்க தமிழக அரசு நேரடித் தேர்வு விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.