ஓட்டப்பாலம் ரவுண்டானாவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; சப்கலெக்டர் நடவடிக்கை
பரமக்குடி: பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டானாவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை சப்கலெக்டர் அபிலாஷா கவுர் உத்தரவின் படி அகற்றப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் நெடுஞ்சாலை பரமக்குடியில் ஓட்டப்பாலம் ரவுண்டானா இருக்கிறது. இங்கிருந்து முதுகுளத்துார், இளையான்குடி என பிரிவு ரோடு செல்கிறது. மேலும் இப்பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் சப்கலெக்டர் கேம்ப் ஆபீஸ், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து மூன்று இடங்களில் பஸ் ஸ்டாப் செயல்படுகிறது. சிலர் ரோடுகளை ஆக்கிரமித்து மண் கொட்டி மேடுபடுத்தி வைத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சப்கலெக்டர் அபிலாஷா கவுர் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை ஆய்வாளர் அனந்தசேகர், தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் ஐயப்பன், ஆர்.ஐ., அருண்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதன், போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதேபோல் ஐந்து முனை, பஸ் ஸ்டாண்ட், பஜார் உள்ளிட்ட ரோட்டோர ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.