அதிகாரிகள் பாராமுகம்
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரில் ரூ.112 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம் பராமரிக்கப்படாமல் அலுவலக கட்டடம் புதர் மண்டியுள்ளது. குடிநீர் வசதிகள் இல்லாமலும், கழிப்பறை பராமரிப்பின்றி பயன்பாடில்லாமல் உள்ளது. சாயல்குடி அருகே மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் 2018 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் நுாறுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளை நிறுத்துவதற்கான இடவசதி உள்ளது.இங்கு ஆழ்கடல் மீன்பிடித்து விட்டு திரும்பும் மீனவர்கள் நலனுக்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மீன் உலர்தளம், குளிர் பதனக்கிடங்கு, வலைகள் சேமிப்பு கூடம், மோட்டார் அறைகள், தளவாட பொருட்கள் பாதுகாக்கும் இடம், தொலைநோக்கு கோபுரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவைகள் உள்ளன. கழிப்பறை வளாகம் பூட்டியே உள்ளது. முன்பு நிர்வாக அலுவலக கட்டடம் அருகே பராமரிக்கப்பட்ட புல் தரைகள் தற்போது கருகியது. மரக்கன்றுகள் அப்பகுதியில் வளர்க்கப்படாமல் பசுமையின்றி உள்ளது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முறையாக குடிநீர் வினியோகம் இன்றி காட்சி பொருளாக உள்ளது. இங்கு ரூ. 112 கோடியில் கட்டப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தின் வழிகாட்டி போர்டுகள் பொலிவிழந்து காணப்படுகிறது. நுழைவுப் பகுதியின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை உரிய நிதி ஒதுக்கீடு செய்து அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க முறையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.