உத்தரகோசமங்கை கண்மாய் கரையை சேதப்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் துார் வாராமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை கண்மாயை துார்வாரி கரையை சேதப்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.உத்தரகோசமங்கை பாசனக் கண்மாய் 400 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது. பொதுப்பணித்துறை வசமுள்ள கண்மாய் முறையாக துார்வாரப்படாததால் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது.கண்மாய் உட்புறங்களில் மேற்பகுதி மணற்பாங்காகவும் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. கண்மாய் நீர்வழித்தடங்களில் முறையாக துார்வாராத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் வரத்து கால்வாயில் இருந்து வரும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.உத்தரகோசமங்கையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டோரம் கண்மாய் கரைப்பகுதி முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேல் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது.பாசன விவசாயிகள் கூறியதாவது: கண்மாய் நீரை நம்பி உத்தரகோசமங்கை,மேலச்சீத்தை, நல்லாங்குடி, களக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஹெக்டேருக்கும் அதிகமாக நெல் விவசாயம் நடக்கிறது. எனவே பாசன கண்மாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கரைப்பகுதிகளை பலம் இழக்கும் வகையில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிற கண்மாயிலிருந்து வரும் நீர்வரத்து கால்வாய், நீர் வழித்தடங்களை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் துார்வாராமல் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கண்மாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.