உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூடைகளை வைக்கலாம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூடைகளை வைக்கலாம்

திருவாடானை : ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நெல் மூடைகளை வைத்து நெல் விலை அதிகமாகும் போது கூடுதல் விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட விற்பனை குழு செயலாளர் ராஜா கூறினார். அவர் கூறியதாவது:விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சேமித்து வைக்கவும், நியாயமான விலைக்கு விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக உதவுகின்றன. திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு ஆர்.என்.ஆர்., மற்றும் ஜோதி போன்ற நெல் ரகங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டது.இதில் ஆர்.என்.ஆர்., ரகத்திற்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் உடனுக்குடன் விற்பனை செய்கின்றனர். ஜோதி ரகத்தை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மூடைகளை சேமித்து வைத்து அதன் பிறகு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிறகு விற்பனை செய்தால் 60 கிலோ மூடைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இது குறித்து சம்பந்தமாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி விவசாயிகள் கடந்த சில நாட்களாக நெல் மூடைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஆர்வமாக சேமிக்கத் துவங்கியுள்ளனர். ஒரு டன்னுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யபட்டுள்ளது. தவிர உழவர் நல நிதி திட்டத்தில் பொருளீட்டு கடனாக ரூ.3லட்சம் வரை வழங்கபடும். திருவாடானை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மத்திய அரசு நிர்வகிக்கும் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் வங்கியிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ