நயினார்கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்; மர்ம நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. ஒரு பனைமரம் வளர்ந்து பயன் தர சுமார் 15 ஆண்டுகள் ஆகிறது. இதில் நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, பனை ஓலைகள் என கற்பக விருட்சமாக விளங்குகிறது. நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டுவோர் மீது சட்டப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது எவ்வித அனுமதியும் பெறாமல் கடந்த சில நாட்களாக காரடர்ந்தகுடியில் 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பட்டா, புறம்போக்கு நிலங்களில் சிலர் வெட்டியுள்ளனர். கிராம மக்களின் தகவலின் பெயரில் வருவாய் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.