பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை மாயம்; ஆக்கிரமிப்பால் வீணாகிய ரூ.2 கோடி
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட நடைமேடை ஆக்கிரமிப்பால் வீணாகிய நிலையில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.இங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஐந்து முனை ரோடு துவங்கி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி வரை இருபுறங்களிலும் நடைமேடை அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைமேடை கட்டிய நாள் முதல் ஆக்கிரமிப்பால் நிறைந்துள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் என மீண்டும் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட், பெரிய பஜார், தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் ஒரே நேரத்தில் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் ஆபத்தை எதிர்நோக்கி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.