பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வீதிமீறி வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். 37 ஆண்டுகளை கடந்த இப்பாலம் சில ஆண்டுகளாக பலவீனமாகி, பாலம் நடுவில் உள்ள இரும்பு பிளேட், தடுப்பு சுவர்கள் சேதமடைந்து சமீபத்தில் மராமத்து செய்தனர். இதனால் பாலத்தை பாதுகாக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதனைக் கண்காணிக்க பாலத்தில் இரு போலீசார் பணிபுரிந்த நிலையில், நேற்று போலீசார் ஒருவர் கூட இல்லை. இதனால் ரயில் பாலத்தை கடந்த படகுகளை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாலத்தில் வரிசையாக நிறுத்தினர். இதனால் அரசு பஸ்கள், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர். எனவே பாலத்தில் நிரந்தரமாக போலீசார் பணிபுரிய எஸ்.பி., சந்தீஸ் உத்தரவிட வேண்டும்.