UPDATED : செப் 18, 2025 08:08 AM | ADDED : செப் 18, 2025 04:32 AM
திருச்சியில் இருந்து விருதுநகர் செல்லும் பயணிகள் ரயிலில் அலுவலகத்தில் பணிபுரிவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என சீசன் டிக்கெட் பயனாளிகள் பயணம் செய்கின்றனர். இவர்கள் மானாமதுரை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் தினமும் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து புதிய ரயிலை பிரதமர் இயக்கி வைத்தார். இந்த ரயில் கல்லல் வருவதற்கு மாலை 6:55 மணிக்கு மேலாகிறது. ஆனால் திருச்சி, விருதுநகர் ரயில் கல்லல் ரயில் நிலையத்திற்கு மாலை 6:25 மணிக்கு வந்து சேரும் நிலையில் அரை மணி நேரம் வரை கிராசிங் விழுகிறது. இதனால் திருச்சி, விருதுநகர் ரயில் மானாமதுரை செல்வதற்கு இரவு 7:30 மணி வரை ஆகிறது. இச்சூழலில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் மானாமதுரைக்கு 7:20 மணிக்கு வந்து புறப்படுகிறது. அப்போது திருச்சி, விருதுநகர் ரயிலில் வருவோர் பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு கி.மீ.,க்கு மேல் நடக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பயணிகள், சீசன் டிக்கெட் பயனாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை பயண டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே தெற்கு ரயில்வே கோட்ட பொது மேலாளர் திருச்சி, விருதுநகர் ரயில் மானாமதுரை வந்த பின்னர் அதாவது இரவு 7:40 மணிக்கு மதுரை- ராமேஸ்வரம் ரயிலை இயக்க வேண்டும். அல்லது திருச்சி - விருதுநகர் ரயில் மானாமதுரைக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.