பஸ் ஸ்டாண்டில் மின் விளக்கு வசதி இல்லாததால் பயணிகள் அவதி
பரமக்குடி நகரின் மையப்பகுதியில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரம் பயணிகள் வெளியூர் செல்ல பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தும் நிலை உள்ளது.மேலும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பரமக்குடி பிரதான இடமாக உள்ளது. இங்கு உயர்கல்வி மற்றும் கல்லுாரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கின்றனர்.தொடர்ந்து ராமேஸ்வரம் பிரதான ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளதால் வெளி மாநிலத்தவரும் ஏராளமானோர் வருகின்றனர்.இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் நெரிசல் மிகுந்த இடமாக உள்ள சூழலில் போதிய மின் விளக்கு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இருக்கும் விளக்குகளும் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பெண் பயணிகள் உட்பட முதியவர்கள் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பஸ் ஸ்டாண்டில் அவ்வப்போது திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் நிலையில் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.