ஹிந்து பஜாரில் கழிப்பறை வசதியின்றி மக்கள் பாதிப்பு
கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட ஹிந்து பஜாரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கீழக்கரை ஹிந்து பஜாரில் காய்கறி மளிகை கடைகள் உள்ளன. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக நகருக்கு வருகின்றனர்.இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் சற்று தொலைவில் உள்ள பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது: கீழக்கரை ஹிந்து பஜாரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சமுதாய கழிப்பறை கூடம் அவசியம் தேவையாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் பொதுக் கழிப்பறை வசதி செய்துதர வேண்டும் என்றார்.