மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காத்திருப்பு கூடம் இன்றி மக்கள் தவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை அறைக்கு வருபவர்களுக்கு காத்திருப்பு கூடம் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விபத்தில் உயிரிழப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள், சந்தேக மரணமடைபவர்கள், உள்ளிட்டவர்களின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு வரப்படுகிறது.இந்த அறைப்பகுதியில் இறந்தவர்களின் உறவினர்கள் தினசரி காத்திருக்கும் நிலை உள்ளது. பிரேத பரிசோதனை பகல் நேரங்களில் பெரும்பாலும்காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே நடக்கிறது. இந்த நேரங்களில் வெளியில் காத்திருப்பவர்களுக்கு ஒரு காத்திருப்பு கூடம் இல்லாததால் மழை, வெயில் நேரங்களில் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லாததால் அவதிப்படுகின்றனர். பொதுக் கழிப்பறை வசதியும் இல்லை. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதியில் பல்வேறு பழைய கட்டடங்கள் உள்ளன பிரேத பரிசோதனை அறை அருகிலேயே முன்னாள் காசநோய் பிரிவு கட்டடம் உள்ளது. அதனை சீரமைத்து திறந்து விட்டால் கூட பிரேத பரிசோதனை அறைக்கு வருகை தந்து காத்திருப்பவர்கள் பயன் படுத்த வசதியாக இருக்கும். வெளிப்பகுதியில் தகர ெஷட்டுகள் அமைத்து தந்தால் கூட மக்கள் காத்திருக்க வசதியாக இருக்கும்.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.