விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் மக்கள்: மனு கொடுத்தும் பயனில்லை அமைச்சர் தொகுதியில் அவலம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் காவிரி குடிநீர் வசதி இல்லாததால் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் வசதி இல்லை. கிராமத்தில் அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் பராமரிப்பின்றி உள்ளது.தினந்தோறும் ஒரு குடம் குடிநீர் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். டிராக்டர் தண்ணீருக்காக தினந்தோறும் காத்திருப்பதால் மக்கள் அத்தியாவசிய வேலைக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே கிராமத்திற்கு காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் அவலநிலை காவிரி குடிநீருக்காக மக்கள் தவம் கிடக்கின்றனர்.