சேதுகரைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் யாத்ரீகர்கள் கோரிக்கை ஆட்டோவில் கூடுதல் கட்டணத்த
திருப்புல்லாணி: சேதுகரைக்கு கூடுதல் பஸ் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள், யாத்ரீகர்கள் கோரிக்கை விடுத்தனர்.ராமநாதபுரத்தில்இருந்து 13 கி.மீ.,ல் சேதுகரை அமைந்துள்ளது. இங்குள்ள சேதுபந்தனை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் மன்னார் வளைகுடா கடலில் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சேதுகரை பஸ் வழித்தடம் எண்:5 -ஏ மதியம் 2:30 மணிக்கு வர வேண்டியது வராமல் உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இல்லாததால் யாத்ரீகர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சேதுகரை ஊராட்சி துணைத் தலைவர் தம்பி கனி கூறியதாவது: சேதுகரை புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும்.இங்கு ஏராளமான யாத்ரீகர்கள் திருப்புல்லாணி கோயில் மற்றும் சேதுகரைக்கு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு கூடுதல் பஸ்களை சேதுகரைக்கு இயக்க வேண்டும்.வெளியூர் யாத்ரீகர்கள்,பொதுமக்கள் சேதுகரைக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர். இது குறித்து டிப்போ மேலாளரிடம் மனு அளித்துள்ளோம். எனவே யாத்ரீகர்கள், பள்ளி மாணவர்கள் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.