10 ஆண்டாக போராடும் வீரர்கள்; பரமக்குடி மினி விளையாட்டு அரங்கை மீட்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
பரமக்குடி : தி.மு.க., ஆட்சிகாலத்தில் துவங்கப்பட்ட பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் 10 ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளது. இதனை மீட்க விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். எனவே தொகுதி எம்.எல்.ஏ., முருகேசன் விளையாட்டு அரங்கை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ரூ.30 லட்சத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நகராட்சி இடத்தில் மினி விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரத்திற்கு அடுத்தப்படியாக பரமக்குடியில் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டது. தற்போதுகாம்பவுண்ட் சுவர் கேட் உடைந்து தடம் தெரியாத வகையில் இருக்கிறது. மேலும் வீரர்களுக்கான அறை பயன்படுத்த முடியாத நிலையில், அனைத்து உபகரணங்களும் காணாமல் போய் விட்டன. மழை பெய்யும் பொழுதும் அரங்கம் குளமாக மாறி வருகிறது. இச்சூழலில் கடந்த சில மாதங்களாக நகராட்சி சந்தைத் திடல் புதுப்பிக்கப்படும் நிலையில், அனைத்து வகையான கால்நடை சந்தை மற்றும் வாகனங்களையும் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர். இந்த திடலில் கிராமப்புற விளையாட்டு போட்டிகள் தொடங்கி, பள்ளி, கல்லுாரிகளுக்கான அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது தடகள களம் சிதைந்து சகதி காடாகி உள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ., உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் வீரர்கள் முறையிட்டும் எந்த பயனும் கிடைக்காமல் இருக்கிறது. தற்போது துணை முதல்வர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் உடனடியாக விளையாட்டு அரங்கை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வீரர்கள் மக்கள் வலியுறுத்தினர்.