மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்டவர் உண்ணாவிரதம் தடுத்து இழுத்துச்சென்ற போலீசார்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வீடு கட்ட தடையின்மை சான்று வழங்க மனு அளித்து 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை வலுக்கட்டாயமாக போலீசார் விசாரணைக்கு இழுத்துச் சென்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கூட்ட அரங்கம் அருகே முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கையை சேர்ந்த ராமச்சந்திரன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ராமச்சந்திரன் கூறியதாவது: எனது மனைவி பெயரில் மேல முதுகுளத்துாரில் உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்காக தாலுகா அலுவலகத்தில் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) வாங்குவதற்காக விண்ணப்பித்தேன். இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக சப்கலெக்டர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வரை மனு அளித்தும் 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்து எனக்கு என்.ஓ.சி., சான்றிதழ் வழங்கி நீதி வழங்க வேண்டும் என்றார். அப்போது அங்கு வந்த கேணிக்கரை போலீசார் ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் வந்தவுடன் மனு அளிக்குமாறு கூறினர். அதற்கு அவர் மறுத்துவிட்டதால் அவரை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.