ம.பி.,யை சேர்ந்த தபால் அதிகாரி திருவாடானையில் தற்கொலை ஜனாதிபதியிடம் சான்றிதழ் பெற்றவர்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ம.பி.,யை சேர்ந்த தபால் ஆய்வாளர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார். ஜனாதிபதியிடம் சான்றிதழ் பெற்ற அவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் சாகார் மாவட்டம் பசந்த்விஹார் காலனியை சேர்ந்த ஆர்யா மகன் பங்கஜ்ஆர்யா 24. திருமணம் ஆகவில்லை. திருவாடானை தபால் அலுவலகத்தில் தபால் ஆய்வாளராக ஓராண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்தார். தொண்டியில் வாடகை அறையில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் பெண்கள் அணியும் துப்பட்டாவில் துாக்கு மாட்டி இறந்து கிடந்தார். தொண்டி போலீசார் விசாரித்தனர். அப்போது மத்திய பிரதேசத்தில் காசிதாஸ் என்ற பல்கலையில் படித்த போது ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இவர் சான்றிதழ் பெறும் போட்டோ இருந்தது. மேலும் தற்கொலைக்கு காரணம் குறித்து எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். போலீசார் கூறியது: பங்கஜ் ஆர்யா படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். தபால்துறை தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளார். திருவாடனையை தலைமையிடமாக கொண்ட 75 கிராமப்புற கிளை தபால் அலுவலகங்களுக்கு அதிகாரியாக பணியாற்றினார். இங்கு திருமணமான இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். அந்த பெண் தன்னிடம் பணத்திற்காக பழகியதாகவும், அவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். பங்கஜ்ஆர்யா உடல் திருவாடானை அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெற்றோருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. அவர்கள் வந்தபின் பிரேத பரிசோதனை நடைபெறும், என போலீசார் தெரிவித்தனர்.