டிச.30க்குள் டாக்டரை நியமிக்காவிட்டால் போராட்டம்: சமாதான கூட்டத்தில் முடிவு
தொண்டி: தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.30க்குள் டாக்டர்களை நியமிக்காவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தொண்டியில் அரசு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரி தொண்டி மக்கள் நலப்பணிக்குழு சார்பில் டிச.30 ல் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று தொண்டியில் சமாதானக் கூட்டம் திருவாடானை தாசில்தார் அமர்நாத் தலைமையில் நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, மக்கள் நலப்பணிக்குழு சார்பில் சிக்கந்தர், நத்தர் சித்திக், முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிரந்தர டாக்டர்கள் நியமிக்கவும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அரசுக்கு முறையாக தகவல் தெரிவித்து விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.டிச.30க்குள் இரண்டு டாக்டர்கள் நியமிக்கப்படாவிட்டால் போராட்டம் நடக்கும் என்று மக்கள் நலப்பணிக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நலப்பணிக்குழுவினர் இன்று (டிச.27) கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளனர்.