மாணவர்களுக்கு இலவச சீருடை சரியான அளவில் வழங்குங்கள்
திருவாடானை : அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை சரியான அளவில் வழங்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுகிறது.இத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நான்கு செட்டுகளாக வழங்கப்படுகிறது. இந்த சீருடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 18 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.சீருடைகள் பெரும்பாலான மாணவர்களுக்கு சரியான அளவில் இருப்பதில்லை. இறுக்கமாகவோ, அல்லது தொள, தொளவெனவோ இருக்கின்றன. பெற்றோர் கூறியதாவது: கடந்த ஆண்டு அளவெடுத்து சீருடைகள் வழங்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் சீருடைகள் இல்லை.கை கால்களை நுழைக்க முடியாதபடி சிறியதாகவும், சிறிய உடல்வாகுள்ள குழந்தைகளுக்கு பெரிய அளவிலும் உள்ளது. பெரியதாக உள்ள சீருடைகளை சரி செய்து உடல் அளவுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து வழங்கலாம். ஆனால் சிறியதாக அமைந்து விடும் சீருடைகளை மாற்ற முடியாமல் வீணாகிறது.இதனால் மீண்டும் புதிதாக சீருடைகளை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் சரியான அளவில் அளவெடுத்து சீருடைகள் தைத்து கொடுக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.