குளபதம் எருது கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே குளபதம் ஊராட்சியில் உள்ள அழகுகுத்தி அய்யனார், அரசாளப் பிறந்த முத்தரசம்மன் கோயில் விழாவையொட்டி கோயில் திடலில் எருது கட்டு விழா நடந்தது.இங்குள்ள மூலவர் அழகு குத்தி அய்யனார், அரசாளப் பிறந்த முத்தரசம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று மதியம் 2:00 மணிக்கு கோயில் வளாகம் அருகே உள்ள பெரிய திடலில் எருது கட்டு விழா நடந்தது.பனை நார் மற்றும் வைக்கோலால் திரிக்கப்பட்ட 150 மீ., நீளமுள்ள பெரிய வடக்கயிற்றை குளபதம் கிராம இளைஞர்கள் பிடித்தனர். அதன் மறுமுனையை காளையின் கழுத்தில் கட்டினர். சீறிப்பாய்ந்த காளையை உள்ளூர் இளைஞர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.கீழக்கரை, திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, பால்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குளபதம் முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். வீர சந்திரபோஸ், அதிவீரராம பாண்டியன், கிராம துணை தலைவர் ரவி, செயலாளர் ராம செல்வம், ஊர் பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் விழாக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குளபதம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.